மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு கொள்முதல் நிலையங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கனமழையால் நனைந்து சேதமடைந்துள்ளன. அவை முளைப்பதற்குள் அரிசி ஆலைகளுக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த மழைகாரணமாக செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதிக விளைச்சல் ஏற்பட்டதால் பெரும்பாலான விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாடினர்.
அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் 92 கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம்முன்பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகள் பல மாதங்களாக காத்திருந்து தாங்கள் விளைவித்த நெல்லை அரசுக்கு விற்பனை செய்தனர். இவ்வாறு பெறப்பட்ட 30 ஆயிரம் மெட்ரிக் டன் வரையிலான நெல் மூட்டைகள் சிலாவட்டம், அண்டவாக்கம், கீரப்பாக்கம் பகுதிகளில் திறந்த வெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
மேலும், அரசு கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, சேமிப்பு கிடங்குக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பற்ற முறையில் மூடைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, இப்பகுதிகளில் கனமழை பெய்ததால், கிடங்கிலிருந்த சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஈரத்தில் நனைந்து மூட்டையில் உள்ள நெல்மணிகள் முளை விடும் சூழல் ஏற்பட்டுள்ளதால், நனைந்த மூட்டைகளை அரிசி ஆலைகளுக்கு விரைவாக எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.