தமிழகம்

“நமது கடமையை அறிவுபூர்வமாக நிறைவேற்ற யோகா பயன்படுகிறது” - மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: “நமது கடமையை, செயல்பாட்டை திறமையுடன் அறிவுபூர்வமாக நிறைவு செய்ய யோகா பயன்படுகிறது” என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சை பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) வளாகத்தில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பேசியது: ”நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள யோகா உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களையும் ஒருங்கிணைக்க தூண்டுதலாகவும், உந்துசக்தியாகவும் விளங்குகிறது.

பண்பாட்டுச் சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோயில் பின்னணியில் பெரும் திரளான மாணவர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து யோகா பயிற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது.

யோகாவை உடற்பயிற்சியாக சிலர் கருதுகிறார்கள். ஆனால், யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, மனதில் உள்ள சஞ்சலத்தை, பிரம்மையை அகற்றி, மனதிற்கு தெளிவை ஏற்படுத்தவும் யோகா பயன்படுகிறது. நமது கடமையை, செயல்பாட்டை திறமையுடன் அறிவுபூர்வமாக நிறைவு செய்ய யோகா பயன்படுகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம் கிருஷ்ணன், உணவு பதன தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் எம் லோகநாதன், கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தின் யோகாச்சாரியார் எஸ் ஸ்ரீதரன், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்பார்வையாளர் ராமகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT