தமிழகம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கக்கோரி ஓபிஎஸ் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல்: விசாரணை இன்றும் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணையை நீதிபதி எஸ்.பிரியா இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார். சென்னையில் நாளை மறுதினம் (ஜூன் 23) நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, திண்டுக்கல்லை சேர்ந்த எஸ்.சூர்யமூர்த்தி என்பவர்சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த பெருநகர 4-வது உதவி உரிமையியல் நீதிபதி பிரியா, விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி சூர்யமூர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எஸ்.பிரியா முன்பு நேற்று நடந்தது.

அப்போது சூர்யமூர்த்தி ஆஜராகி, ‘‘அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் தற்போது அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பொதுக்குழு கூட்டம்நடந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் தேவையற்ற பிரச்சினைகள், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்துள்ளன என்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில்வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி ஆஜராகி, ‘‘பொதுக்குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கவில்லை. கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள பொருள் (அஜெண்டா) என்ன என்பது குறித்து தெரிவிக்காத சூழலில், இந்த கூட்டத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என கட்சியின் இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம், அதிமுக தலைமைக் கழகத்தால் ஜூன் 19-ம் தேதி இரவு 9.15 மணிக்கு பெறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை நடத்த முடியும். ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது’’ எனக் கூறி அந்த கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விக்னேஷ், திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் வழக்கறிஞர் விஜய பிரசாந்த், கே.ஏ.செங்கோட்டையன் தரப்பில் வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் தரப்பு வாதத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மனுதாரர் அதிமுக உறுப்பினரே இல்லை எனும்போது இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.

அதையடுத்து நீதிபதி எஸ்.பிரியா, இதுதொடர்பாக இந்த வழக்கின் எதிர் மனுதாரர்களாக உள்ள அதிமுக தலைமைக் கழகம், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, தமிழ்மகன் உசேன், சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ப.தனபால் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (ஜூன் 21) தள்ளி வைத்துள்ளார்.

உரிமையியல் நீதிமன்றத்தில்..

இதேபோல அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான சி.பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை, சென்னை பெருநகர 23-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி இ.தாமோதரன் முன்பு நடந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.முத்துக்குமார் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் நாளை (ஜூன் 22) பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT