தமிழகம்

யோகா தினத்தை யொட்டி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் 10 ஆயிரம் இடங்களில் இன்று யோகா பயிற்சி: துணை தலைவர் வி.பி.துரைசாமி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச யோகா தினத்தையொட்டி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் இன்று யோகா பயிற்சி நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜகதலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் வி.பி.துரைசாமி கூறியதாவது:

யோகா கலையை பாதுகாக்க பிரதமர் மோடியால் 2015-ம்ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதல்சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி 21-ம் தேதி (இன்று) தமிழகத்தில் பாஜக சார்பில் 10 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி நடைபெறுகிறது.

மாமல்லபுரத்தில் நடக்கும் பயிற்சி முகாமில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைஇணை அமைச்சர் நாராயணசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர்பங்கேற்கின்றனர்.

கன்னியாகுமரியில் நடக்கும் பயிற்சியில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பங்கேற்கிறார்.

75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா தற்போது கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் இன்று யோகா பயிற்சிகள் நடக்கிறது.

‘அக்னி பாதை’ திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுகின்றன. அக்னி பாதை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டுகள் பயிற்சியை முடித்த பிறகு, அவர்களிடம் கருத்தை கேட்டு குறைகள் இருந்தால், அதை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசினால் ஏற்றுக்கொள்ளலாம்.

அதை செய்யாமல் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுவது தேச நலனுக்கு எதிரானது. தேச நலனில் அரசியல் சாயம் பூசக்கூடாது. கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மத்திய அரசு உறுதியாக மீட்டுத் தரும். அதற்கு அண்ணாமலை காரணமாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, சர்வதேச யோகா தின தமிழக பாஜக பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT