கோவை: கோவையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கட்டிடத்தை ரூ.1.50 கோடி மதிப்பில் புனரமைக்கும் திட்டம் தாமதம் ஆகிவருகிறது. கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு கடந்த 1965-ம் ஆண்டு முதல்செயல்பட்டு வருகிறது. தற்போது 8 மோப்ப நாய்கள் உள்ளன.
தவிர, பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநகரில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்தால், அப்பகுதிக்கு மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டு, துப்பறியும் பணியை போலீஸார் மேற்கொள்வர்.
மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற பணிகளிலும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் இப்பிரிவு இயங்குகிறது.
மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மோப்ப நாய் பிரிவின் கட்டிடத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை.
மோப்ப நாயுடன் பயிற்சிக்கு வரும் காவலர்கள் தங்குவதற்கு இடம், கழிவறை, தண்ணீர் வசதி இல்லை. நாய்கள் பராமரிக்கப்படும் இடத்தின் மேற்கூரை சிதிலமடைந்து மழைநீர் உள்ளே வரும் நிலை உள்ளது.
இதுகுறித்து, மாநகர காவல்துறையினர் கூறும் போது, ‘‘மோப்ப நாய் பிரிவு கட்டிடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 4,220 சதுரடிபரப்பளவில் புதிய கட்டிடம் கட்டவும், மோப்ப நாய்கள் தங்குவதற்கும், உலவுவதற்கும் விசாலமான இடவசதியுடன் 27 அறைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உடன் வரும் காவலர்கள் தங்குவதற்கும் அறைகள் கட்டப்பட உள்ளன. இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக் காக காத்திருப்பில் உள்ளது’’ என்றனர்.
மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘துப்பறியும் மோப்ப நாய் பிரிவின் முக்கியத்து வம் குறித்தும், அதை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் காவல்துறை இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் புனரமைப்புப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு, மோப்ப நாய் பிரிவு மேம்படுத்தப் படும்’’ என்றார்.