சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் நேற்று மாலை பெய்த திடீர் மழையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள். படங்கள்: பு.க.பிரவீன் 
தமிழகம்

சென்னை, புறநகரில் கொட்டித் தீர்த்த கனமழை: அதிகபட்சமாக தாம்பரத்தில் 13 செமீ பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 13 செமீ மழை பதிவானது.

கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு சென்னையில் மழை பெய்யவில்லை. கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் குறிப்பிடும்படியாக கோடை மழையும் பெய்யவில்லை.

ஜூன் மாதம் தொடங்கியது முதல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இரவிலும் புழுக்கம் நிலவியது. ஆங்காங்கே இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை இருந்து வந்தது. அதன் பின்னர் கடும் காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் ஆக ஆக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

அதிகபட்சமாக தாம்பரத்தில் 13 செமீ, தரமணி, கொரட்டூரில் தலா 11, பெரும்புதூர், காட்டுக்குப்பம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், கிண்டி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் தலா 9, நுங்கம்பாக்கம், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் தலா 8, சோழிங்கநல்லூரில் 7, எம்ஜிஆர் நகர், அயனாவரம் ஆகிய இடங்களில் தலா 6, பெரம்பூரில் 5, தண்டையார்பேட்டையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால்
துரைப்பாக்கத்தில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளி
மைதானத்தில் தேங்கிய மழைநீரில்
நேற்று நடந்து சென்ற மாணவர்கள்.

யாரும் எதிர்பாராத திடீர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது.

நேற்றும் மழைப் பொழிவு

சென்னையில் நேற்று காலைமுதல் கடும் வெயில் நிலவியது. பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருந்தது. மாலையில்சுமார் 6.30 மணி அளவில் 2-வதுநாளாக மழை பெய்தது. மாநகரம்முழுவதும் பரவலாக மிதமான மழைபெய்த நிலையில், அலுவலகம் முடிந்து வீடு திரும்ப பேருந்துநிலையங்களில் காத்திருந்த தொழிலாளர்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

SCROLL FOR NEXT