புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் எஸ்.களபம் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் நேற்று பெயர்ந்து விழுந்த சிமென்ட் பூச்சு. (உள்படம்) சேதமடைந்த மேற்கூரை. 
தமிழகம்

கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளியில் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவர் காயம்: தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் எஸ்.களபம் அரசு தொடக்கப் பள்ளி மேற்கூரையின் சிமென்ட் பூச்சு நேற்று பெயர்ந்து விழுந்ததில் மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.களபம் அரசு தொடக்கப் பள்ளியில் மொத்தம் 39 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் பணிபுரிகின்றனர். 40 ஆண்டுகள் பழமையான இப்பள்ளிக் கட்டிடத்தில் 2 வகுப்பறை சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மேற்கூரையின் உள்பகுதியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்த நிலையில் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.20 லட்சத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுமாறு கல்வித் துறை அலுவலர்கள் வழியாகவும், நேரடியாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவர்களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நேற்று இப்பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 4-ம் வகுப்பு மாணவர் பரத்(9) காயமடைந்தார். இதையடுத்து, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பள்ளிக் கட்டிடத்தை கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் நளினி ஆய்வு செய்தார்.

பின்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் பரத்திடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நலம் விசாரித்தார்.

இதனிடையே பள்ளியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியர் மகாலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT