அரவக்குறிச்சி தொகுதியில் மே 17 அல்லது 18-க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக மே 16-ம் தேதிக்குப் பதில் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழகத்தில் 233 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் மே 19-ம் தேதியே தெரிந்துவிடும்.
இந்நிலையில், அரவக்குறிச்சியில் மே 23-ம் தேதி தேர்தல் நடந்தால் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ அதே கட்சிக்கு அரவக்குறிச்சி மக்கள் வாக்களிப்பதற்கான தாக்கத்தை உருவாக்கிவிடும்.
இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே மே 17 அல்லது 18-ல் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.