மதுரை: மதுரையில் வறுமைப் பின்புலத்தில் படித்து பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சாதித்திருக்கிறார் மாற்றுத்திறன் மாணவி சக்தி ஜான்சி ராணி. ஐஏஎஸ் இலக்கை நோக்கியும் அவர் அடியெடுத்து வைத்துள்ளார்.
மதுரை ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.சக்தி ஜான்சிராணி பிளஸ் 2 தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்; 98, ஆங்கிலம்; 94, பொருளியல்; 99, வணிகவியல்; 100, கணக்கு பதிவியல்; 100, கணினி பயன்பாடு 100.
மாணவி சக்தி ஜான்சிராணி அவரது தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தை உடல்நலன் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். தாயின் அரவணைப்பிலே வளர்ந்து வந்துள்ளார். இவரது தாய் தனியார் கெமிக்கல் கடையில் பணிபுரிந்து மகளை படிக்க வைத்துள்ளார். மிகுந்த வறுமையில் படித்து மாணவி சக்தி ஜான்சி ராணி பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் சாதித்துள்ளார்.
மாணவி சக்தி ஜான்சி ராணி கூறுகையில், ''கரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் கூட இல்லாமல் சிரமப்பட்டு படித்தேன். கல்லூரியில் பிகாம் எடுத்து படிக்க உள்ளேன். எதிர்காலத்தில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே என்னுடைய கனவாக உள்ளது. அதற்காக இப்போது முதலே என்னைத் தயார்படுத்திக் கொள்வேன்'' என்றார்.