ஓசூர்: ஓசூர் பகுதியில் தக்காளி சாகுபடி பரப்பளவு இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு நாற்றுகளை இலவசமாக வழங்க தோட்டக்கலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர், கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலமாக தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் தரமான மற்றும் சுவைமிகுந்த தக்காளி சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு செல்கிறது.
நடப்பாண்டில் கோடையில் பெய்த அதிகனமழை காரணமாக தக்காளி செடியில் பூக்கள் உதிர்ந்தும், மழை நீர் தேங்கி தக்காளி தோட்டம் சேதமடைந்து மகசூல் பாதியாக குறைந்தது. இதனால், தக்காளி ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையானது.
இதனால், பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டியதால், ஓசூர் பகுதியில் தக்காளி சாகுபடி பரப்பு இருமடங்கு உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.முதுகானப்பள்ளி விவசாயி ஸ்ரீதர் கூறும்போது, “தக்காளி பயிரிட ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 ஆயிரம் நாற்றுகள் தேவை. ஒரு ஏக்கருக்கு மொத்தம் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.
தக்காளி 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது. இயற்கை உரமிட்டு நன்கு பராமரித்து வந்தால் 4 முதல் 5 முறை தக்காளி அறுவடை செய்யலாம். ஒரு முறை அறுவடைக்கு 400 முதல் 500 பெட்டிகள் (ஒரு பெட்டி - 25 கிலோ) வரை தக்காளி கிடைக்கும்” என்றார்.
பத்தலப்பள்ளி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜாரெட்டி கூறும்போது, “ஓசூர் பத்தலப்பள்ளி சந்தைக்கு தினமும் 100 டன் தக்காளி வரத்து உள்ளது. சந்தையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான 25 கிலோ உள்ள ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ.1000 வரை விலை குறைந்துள்ளது” என்றார்.
தளி துணை தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணியன் கூறும்போது, “தக்காளி பயிரிடும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு தேவையான தக்காளி நாற்றுகள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக உயர் விளைச்சல் உள்ள தக்காளி நாற்றுகளை உயர் தொழில் நுட்பத்தில் அரசுப்பண்ணையில் உற்பத்தி செய்து வழங்க தோட்டக் கலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல முட்டை கோஸ், காலிஃபிளவர், மிளகாய், செண்டுமல்லி ஆகிய வற்றின் விதைகளும் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.