மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்காக திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம். 
தமிழகம்

செப்டம்பர் மாதத்தில் மேட்டூர் உபரிநீர் திட்டப்பணிகள் நிறைவடைய வாய்ப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை

எஸ்.விஜயகுமார்

சேலம்: செப்டம்பர் மாத இறுதிக்குள் மேட்டூர் உபரிநீர் திட்டப்பணிகள்நிறைவடைய வாய்ப்புள்ளது. மேலும், பணிகள் நிறைவடைந்த பின்னர் வறண்ட 100 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு, சரபங்கா வடிநிலக்கோட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் வகையில் ரூ.565 கோடி மதிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் மேட்டூர் உபரிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

இத்திட்டம் நிறைவேறும்போது, நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் 4,238 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்தாண்டு செப்டம்பரில் மேட்டூர் அணை நிரம்பியபோது, உபரிநீர் திட்டத்தில் முதல்கட்டமாக பணிகள் முடிவுற்ற ஏரிகளுக்கு திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் கொண்டு செல்லப்பட்டது.

இதன் மூலம், காளிப்பட்டி ஏரி, சின்னேரி, ராயப்பன் ஏரி, மானாத்தாள் ஏரி, டி.மாரமங்கலம் (தொளசம்பட்டி ஏரி) ஏரி, பெரியேரிப்பட்டி ஏரி, தாரமங்கலம் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின.

இந்நிலையில், இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக, டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை கடந்த மே 24-ம் தேதி திறக்கப்பட்டது.

இதனிடையே, தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதால், அணைக்கான நீர் வரத்து இனி படிப்படியாக அதிகரிக்கவும், அணை நிரம்பவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அணை நிரம்பினாலும், உபரிநீர் திட்டப்பணிகள் நிறைவடையாமல் உள்ளதால், ஏரிகளுக்கு உபரிநீரை வழங்க முடியாத நிலையுள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணை உபரிநீர் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திப்பம்பட்டி தலைமை நீரேற்றுநிலையப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இறுதி கட்டத்தில் மின் இணைப்பு, உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளாளப்பட்டி மற்றும் கன்னந்தேரி துணை நீரேற்று நிலையங்களில் இறுதி கட்ட பணி நடைபெறுகிறது.

ஒட்டுமொத்தமாக 34 கிமீ தூரம் குழாய் பதிக்கும் பணியில் 32 கிமீ தூரம் பணிகள் நிறைவடைந்துள்ளன. நங்கவள்ளி அடுத்த விருதாசம்பட்டியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தால், நங்கவள்ளி ஏரியில் இருந்து தொடர்ச்சியாக 30 ஏரிகளுக்கு நீர் வழங்க முடியும். 87 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், குழாய் பதிக்கும் பணி மற்றும் நீரேற்று நிலைய பணிகள் நிறைவடையாமல் உள்ளன.

இந்நிலையில், உபரிநீரை ஏரிகளுக்கு வழங்கினால், இத்திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் பணிகள் தொய்வு ஏற்படும். எனவே, அணை உபரிநீரை தற்போது எடுக்க வாய்ப்பில்லை. பணிகள் வரும் செப்டம்பருக்குள் நிறைவடையும்.அதன் பின்னர், ஒட்டுமொத்த ஏரி களுக்கும் உபரிநீரை வழங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT