மேல்மருவத்தூர்: ராணுவத்துக்கு ஆள் சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்த புதிய அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ரயில் நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்புதெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர் மு.பிரியசித்ரா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மு.தமிழ்பாரதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் நேற்று முன்தினம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.