அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து காதில் பூ சுற்றி இளைஞர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காதில் பூ சுற்றி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ராணுவத்தில் இளைஞர்களை ஒப்பந்த ஊழியராக நியமிக்கும் அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நேற்று ராஜா தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் பாஸ்கர், இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினர். வாலிபர் சங்க செயலாளர் ஆனந்த், மாணவர் சங்க செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், “இளைஞர்களின் வேலைவாய்ப்பை அக்னி பாதை திட்டம் பறிக்கிறது. அதிகளவில் இளைஞர்கள் வேலைக்காக காத்துள்ளனர். குறிப்பாக புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை நாட்டிலேயே அதிகம்.

கடந்த இரு ஆண்டுகளாக முப்படைகளுக்கும் தேவையான வீரர்களைக்கூட மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. முதல்கட்ட தேர்வு நடந்த பிறகு அடுத்தக்கட்ட தேர்வுக்கு பலரும் காத்துள்ள சூழலில் அக்னி பாதை திட்டத்தை அறிவித்துள்ளனர்.

முக்கியமாக இது தேச பாதுகாப்புக்கு எதிரானது. அதனால் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காதில் பூ சுற்றி போராட்டம் நடத்தினோம்” என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT