திருச்சி திருவானைக்காவல் மாம்பழச் சாலை சிக்னல் அருகே நேற்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடக்கும் அரசுப் பேருந்து.படம்: ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

திருவானைக்காவல் மாம்பழச் சாலை சிக்னல் அருகே பிரேக் பிடிக்காததால் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் மாம்பழச் சாலை சிக்னல் அருகே பிரேக் பிடிக்காததால் நேற்று அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் அருகே உள்ள மேலகண்ணுக்குளத்தில் இருந்து குருவம்பட்டி வழியாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் செங்குட்டுவன்(53) ஓட்டினார். நடத்துநராக ராஜூ பணியில் இருந்தார்.

பேருந்து திருவானைக்காவல் மாம்பழச்சாலை அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை. இதையடுத்து, ஓட்டுநர் செங்குட்டுவன் பிரேக் பிடிக்கவில்லை என கத்தியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்குள்ள சிக்னல் அருகே சாலையோரத்தில் இருந்த நடைமேடையில் பேருந்து மோதி கவிழ்ந்தது.

இதில், பேருந்தின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த விபத்தில் லேசான காயமடைந்த ஓட்டுநர் செங்குட்டுவன் உள்ளிட்ட 20 பேர் ரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT