அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள பெரிய ஏரியில் 5 டன் எடையுள்ள மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல் ஷாப் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப் பாட்டில் உள்ள இந்த ஏரியில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
இந் நிலையில், இந்த ஏரியில் இருந்த சுமார் 5 டன் எடையுள்ள மீன்கள் நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்து மிதந்தன.
இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. உடனே, அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மீன்கள் எப்படி உயிரிழந்தன என்பது குறித்து ஆய்வு நடத்த நகராட்சி ஆணை யாளர் லதா, பொறியாளர் ஆசிர்வாதம், சுகாதார அலுவலர் மோகன், நீர்வளத்துறை ஆதாரத் துறை உதவி பொறியாளர் பிரசன்னா ஆகியோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
பிறகு, ஏரி நீரை மாதிரியாக சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் ஏரியில் மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர். ஏரியில் யாரேனும் விஷம் கலந் தார்களா? அல்லது ரசாயனம் கலந்த கழிவுகள் ஏரியில் கலக்கப் பட்டதா? என்பது குறித்து அதி காரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.