எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பெண்ணை,ஆர்பிஎஃப் ஆய்வாளர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். அவரை பயணிகள், அதிகாரிகள் பாராட்டினர்.
கடந்த 17-ம் தேதி மாலை சென்னை தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட சார்மினார் விரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தின் 5-ம் எண் நடைமேடைக்கு வந்தது. பயணிகள் ஏறிய பிறகு, மாலை 5.49 மணிக்கு ரயில் புறப்பட்டது.
அப்போது, ரயிலின் ஏ3 பெட்டியில் ஏறுவதற்காக, தெலங்கானா மாநிலம் ஆர்.ஆர். மாவட்டத்தைச் சேர்ந்த கலாவதி ரெட்டி (48) என்ற பெண் ஓடிவந்தார். மெதுவாக நகர்ந்த ரயிலில் ஏற முயன்ற அவர், நிலை தடுமாறி விழுந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் நிலை உருவானது.
இதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) உதவி ஆய்வாளர் தேசி, துரிதமாக செயல்பட்டு, அந்த பெண்ணை வெளியே இழுத்து அவரது உயிரை காப்பாற்றினார். உடனடியாக ரயில் கார்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், அந்த பெண்ணை ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். விரைந்து செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆர்பிஎஃப் உதவி ஆய்வாளரை பயணிகளும், அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.