சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைக்கு கால்முட்டி சவ்வு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. மகளுக்காக தனது முட்டி சவ்வை தந்தை தானமாக வழங்கியுள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்தவர் பாலமுருகன். நெசவுத் தொழிலாளி. இவரது மகள் மாரியம்மாள் (19), இந்திய கால்பந்து அணியில் முக்கிய வீராங்கனையாக உள்ளார். 8 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர், கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். இடதுகால் ஆட்டக்காரரான இவர், பிரேசில், சுவீடன், ஈரானுக்கு எதிரான போட்டிகளில் 12 கோல்களைப் போட்டுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டிக்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருடைய இடதுகால் முட்டியில் சவ்வு (ஏசிஎல் சவ்வு) கிழிந்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, மாரியம்மாளை சிகிச்சைக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்தார்.
மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் அறிவுறுத்தலின்படி விளையாட்டு மருத்துவத் துறை இயக்குநரும், மூட்டு மற்றும் தோல்பட்டை சீரமைப்பு நிபுணருமான மருத்துவர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் மாரியம்மாளுக்கு மாற்று சவ்வை பொருத்த முடிவு செய்தனர். இவரது தந்தை, மகளுக்காக தனது மூட்டு சவ்வை தானம் கொடுக்க முன்வந்தார்.
இதையடுத்து, தந்தையின் வலதுகால் முட்டியில் இருந்து சவ்வை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்தனர். பின்னர், சிறுதுளை அறுவை சிகிச்சை மூலம் மாரியம்மாளின் இடதுகால் முட்டியில் சவ்வை வெற்றிகரமாகப் பொருத்தினர். அறுவை சிகிச்சைக்குப்பின் மாரியம்மாள் நலமுடன் உள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் கூறியதாவது:
பொதுவாக மூட்டி சவ்வு கிழிந்துவிட்டால், அவர்களின் உடலில் இருந்தே மற்றொரு சவ்வை எடுத்து வைத்துவிடுவோம். இல்லையென்றால் உடல் உறுப்புகள் தானம் மூலம் பெற்றப்பட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சவ்வு வைக்கப்படும். இது சாதாரண வேலை செய்பவர்களுக்கு போதுமானது இருக்கும். ஆனால், கால்பந்து வீராங்கனையான மாரியம்மாளுக்கு அதுபோல் வைக்க முடியாது. அப்படி வைத்தால் பழைய மாதிரி விளையாட முடியாது.
அதனால், அவரது தந்தையின் முட்டியில் இருந்து சவ்வு எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சவ்வு தளர்ச்சி அடையாமலும், கிழியாமலும் இருக்கும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இரண்டு அறுவை சிகிச்சைகளும் தனியார் மருத்துவமனைகளில் செய்வதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். இன்னும் 6 மாதத்தில் மாரியம்மாள் மீண்டும் இந்திய கால்பந்து அணியில் விளையாட முடியும்.
உயிருள்ள ஒருவரிடம் இருந்து முட்டி சவ்வை எடுத்து மற்றொருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவே முதல்முறை. இதுபோன்ற அறுவை சிகிச்சை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் மட்டும்தான் செய்கிறார்கள். அங்கு 2008-ம் ஆண்டில் நான் பயிற்சி எடுத்ததால், இங்கு இந்த அறுவை சிகிச்சையை என்னால் செய்ய முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.