திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். 
தமிழகம்

திருப்பத்தூரில் பெய்து வரும் தொடர் மழையால் திடீர் வெள்ளத்தால் சூழ்ந்த ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதி

செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் தொடர் மழையின் காரணமாக ஹவுசிங் போர்டு குடியிருப்புப் பகுதியில் சுமார் 2 அடி அளவுக்கு வெள்ள நீர் தேங்கியது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் திடீர் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்ச அளவாக திருப்பத்தூரில் 67.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆம்பூரில் 7.6, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 10.6, ஆலங்காயத்தில் 4, வாணியம்பாடியில் 9, நாட்றாம்பள்ளியில் 44, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் 30 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், திருப்பத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பதிவாகி வரும் நிலையில் திருப்பத்தூர் பெரிய ஏரி, அந்தனேரி ஏரி, கதிரமங்கலம் ஏரி, சின்ன கசிநாயக்கன்பட்டி ஏரி உள்ளிட்ட ஏரிகள் ஏற்கெனவே நிரம்பியிருந்ததால் உபரி வெள்ள நீர் அதிகளவில் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியேறியது.

இதில், வேலன் நகர், அவ்வை நகர், கதிர மங்கலம், கசிநாயக்கன்பட்டி பகுதிகளில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் திடீரென திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தன.

சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட பகுதியில் 2 அடி அளவுக்கு வெள்ள நீர் தேங்கியதுடன் வீடுகளுக்குள் புகுந்தது. மழை வெள்ளம் வெளியேற வழியில்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

இந்த தகவலை அடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் முதியவர்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா உள்ளிட் டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர், ‘பொக்லைன்’ இயந் திரத்தின் உதவியுடன் ஏரி கால்வாய் தூர்வாரப்பட்டது. ஹவுசிங் போர்டு பகுதியில் தேங்கிய வெள்ள நீர் வெளி யேறவும் வழிவகை செய்யப்பட்டது. தொடர் நடவடிக்கையின் காரணமாக வெள்ள நீர் வெளியேறிய நிலையில் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

SCROLL FOR NEXT