தமிழகம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை என்று மின்சாரதுறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவரிடம், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதல் ஆளாக செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார் என அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் சிலர் வேலை எதுவும் இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நோட்டா வாக்குகளுடன் போட்டி போடும் கட்சியினர் அவர்கள். எப்போதும் வீர வசனம் பேசும் அவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார்.

குஜராத்தில் மின்வெட்டு

நிலக்கரி தட்டுப்பாடு இருந்த நேரத்திலும் தடையில்லாத மின்சாரத்தை நாங்கள் அளித்து விட்டோம். ஆனால் பாஜக ஆளும் குஜராத்தில் தொழிற்சாலைக்கு மின்வெட்டு அறிவித்தனர். தமிழகத்துக்கு குறைந்த விலைக்கு 143 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் இதைவிட கூடுதல் விலை கொடுத்து நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது.

மக்கள் சார்ந்த பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு எடுத்து வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக எதையாவது பேசுகின்றனர்.

தீர்மானிக்கும் சக்தி ஸ்டாலின்

வெறும் 4 சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு தமிழகத்தின் எதிர்க்கட்சி எனக் கூறலாமா? அவர்களை விட கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இயக்கங்கள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழக முதல்வர் இருந்து 39 தொகுதிகளையும் வென்றெடுப்பார் என்றார்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்

SCROLL FOR NEXT