தமிழகம்

சென்னையில் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதை எதிர்த்து ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை இதனுடன் இணைப்பதை எதிர்த்தும், பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கவும் வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பாரத ஸ்டேட் வங்கியுடன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா ஆகிய 5 வங்கிகளை இணைக்க தலைமை பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. இதை எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம். இவ்வங்கிகளை இணைப்பதன் மூலம் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலைவாய்ப்பு இழப்பார்கள்.

ஜூன் 7, 28-ம் தேதி

இவ்வாறு வங்கிகளை இணைப்பதால் வாடிக்கை யாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். இந்த 5 வங்கிகளும் சிறிய வங்கிகளாக இருந்தாலும் அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. துணை வங்கிகளை இணைப்பதைக் கண்டித்து வரும் ஜூன் 7 மற்றும் 28-ம் தேதிகளில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதில் 75 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பர்.

கைவிட வேண்டும்

எனவே, பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு துணை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு வெங்கடாச் சலம் கூறினார்.

SCROLL FOR NEXT