தமிழகம்

முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை ஜூன் 26-ல் திறப்பு: முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 26-ம் தேதிதிறந்து வைக்க உள்ளார் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக கடந்த2018 ஆகஸ்ட் 22-ம் தேதி இரவு முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன.

இதை தற்காலிகமாக சீரமைத்து, தண்ணீர் அதிக அளவில் வெளியே செல்வது தடுக்கப்பட்டு, அதன் அருகிலேயே ரூ.387.60 கோடி செலவில் புதிய அணை கட்டுமானப் பணிகள் 2019 ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டு தற்போது 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த கதவணையை நேற்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதியகதவணையின் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ளபணிகளும் விரைந்து முடிக்கப்படும்.

இந்த கதவணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 26-ம்தேதி திறந்து வைக்கவுள்ளார். இதன் வழியாக கார்கள், இருசக்கர வாகனங்கள் தவிர வேறு வாகனங்கள் செல்ல முடியாது. எனவே பிற வாகனங்கள் செல்வதற்கான திட்டம் உள்ளது. அதை தமிழக முதல்வர் கதவணை திறப்பின்போது அறிவிப்பார்.

தூர்வாரும் பணிகள் திருச்சி மாவட்டத்தில் ரூ.18.5 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.பழைய பாலத்தில் 35, 36-வது மதகுகள் மட்டும் கீழே இறங்கியிருக்கின்றன. அதில் பிளேட் வைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. எவ்வித பாதிப்பும் இப்போது இல்லை.

சிந்தாமணி, ஸ்ரீரங்கம் இடையே புதிய காவிரி பாலம் ரூ.130 கோடிமதிப்பீட்டில் கட்டும் பணி இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர்மு.அன்பழகன், எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆர்.கீதா, மணிமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

நான் திருச்சி மந்திரி

முக்கொம்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேருவிடம் மேகேதாட்டு விவகாரம் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது, நேரு அவருக்கே உரிய பாணியில், ‘‘நான் திருச்சி மந்திரி, திருச்சியை பற்றி மட்டும் பேசுங்கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT