தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே நிகழ்ந்த தேர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
பென்னாகாரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஅள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை ஒட்டி கடந்த 13 ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெற்றது. வழக்கமாக தேரோடும் பாதையில் சுற்றி வந்த தேர், தேர்நிலையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தேரின் அச்சு கழன்றதில் பக்தர்கள் கூட்டத்தில் முன்னோக்கி தேர் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தேரின் கீழே சிக்கி பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த மனோகரன்(57), முருகன்(60), மாதேஷ்(60), மாதே அள்ளியைச் சேர்ந்த மாதேஷ்(45), பெருமாள்(53), பாப்பிநாயக்கன அள்ளியைச் சேர்ந்த சரவணன்(50) ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் சிலர் லேசான காயங்களுடன் தப்பினர். பலத்த காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி அன்று இரவே மனோகரன், சரவணன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்தவர்களில் பெருமாள் என்பவரை மேல் சிகிச்சைக்காக 14ம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளி) உயிரிழந்தார். இது தொடர்பாக, பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.