தமிழகம்

மாமதுரையை மரங்கள் நிறைந்த மதுரையாக மாற்றுவோம்: இயற்கையை காக்கும் 2000 மாணவர்கள்

குள.சண்முகசுந்தரம்

மனிதர்களுக்கும் மரங்களுக்கும் உள்ள பிணைப்பை உணர்த்துவதற்காக 2 மாத தீவிர பிரச்சாரத்தில் இறங்குகிறது மதுரையில் உள்ள ’யூத் லீடு இந்தியா’ என்ற இளைஞர் அமைப்பு.

மதுரையைச் சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரி பிரசாந்த் குமார். இளைஞர்கள் மூலம் சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவர் உருவாக்கிய அமைப்புதான் ’யூத் லீடு இந்தியா’. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமே சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பிரசாந்த் குமாருடன் முகநூலில் இணைந்திருக்கிறார்கள். இவர்களை வைத்து சாதித்ததும் சாதிக்கப்போவதும் என்ன? அதுகுறித்து பிரசாந்த் குமாரே விளக்குகிறார்.

’’நீர் நிலைகளை சுத்தப்படுத்துவதை விட அவைகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதுதான் இப்போது பெரிய வேலையாக இருக்கிறது. ஆரம்பத்தில், மதுரையை சுற்றியுள்ள சில கண்மாய்களை தூர்வாரி சுத்தப்படுத்தினோம். ஆனால், அதை எங்களால் முழுமையாக செய்ய முடியவில்லை. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் அதற்குக் காரணம்.

முதலில் மனமாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று முடிவுக்கு வந்தோம். பெரியவர்களிடம் பிரச்சாரம் செய்தால் எடுபடாது என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களை கையில் எடுத்தோம். தினமும் 10 வகுப்புகளில் தலா 50 மாணவர்களிடம் பேசுவது என்று முடிவெடுத்தேன். மாணவர்களிடம், இயற்கையை நாம் எப்படியெல்லாம் சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எளிதில் புரியும்படி எடுத்துச் சொல்வேன்.

தமிழ்நாட்டில் தினமும் 5 கோடி பேராவது டூத் பேஸ்ட் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவரும் தலா ஒரு கிராம் பேஸ்ட்டை பயன்படுத்தினால் 5 கோடி கிராம் அளவுக்கான ரசாயனக் கழிவுகள் பூமியில் கலந்து பூமியை நச்சுப்படுத்துகிறது. இதேபோல்தான் சோப்புக் கழிவு உள்ளிட்ட ரசாயனங்களும் பூமியை நாசப்படுத்துகின்றன. வீடுகளில் சி.எஃப்.எல்., எல்.ஈ.டி. பல்புகளை பயன்படுத்தினால் வெப்பமயமாதல் குறைவதுடன் மின்சாரமும் மிச்சமாகும். குழாயிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் 24 மணி நேரத்துக்கு சொட்டினால் 4 லிட்டர் தண்ணீர் வீணாகும்.

இதையெல்லாம் அந்த மாணவர்கள் மத்தியில் பேசும்போது ஒரு வகுப்புக்கு நான்கைந்து பேராவது என் அருகே வந்து, ‘நம்ம ஏதாச்சும் செஞ்சாகணும் சார்’ என்பார்கள். அவர்கள்தான் எனக்குத் தேவை என்பதால் அந்த மாணவர்களை மட்டும் எங்கள் அமைப்பில் சேர்ப்போம். இப்படித்தான் 2000 மாணவர்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். இன்னமும் பிரச்சாரம் செய்து ஆர்வமுள்ள மாணவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். இப்போது எங்கள் அமைப்பில் உள்ள மாணவர்களும் பிரச்சாரம் செய்யப் பழகிவிட்டார்கள்.

இயற்கையை சீரழிப்பதில் பெரும் பங்கு பாலித்தீன் பைகளுக்கு இருக்கிறது. இதை உணர்த்துவதற்காக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீணான பாலிதீன் பைகளை காசு கொடுத்து வாங்கும் முயற்சியில் எங்களது மாணவர்கள் ஈடுபட இருக்கிறார்கள். மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உணர்வுகளை மக்கள் மறந்துட்டாங்க. மரங்களால் உருவாக்கப்படும் பசுமை போர்வையானது ஒரு நகரத்தில் 33 சதவீதம் இருக்க வேண்டும்.

ஆனால் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 10 சதவீதம்தான் இருக்கிறது. இந்த அபாயத்தை உணராமல் மரங்களை வெட்டிக்கிட்டே இருக்காங்க.

மதுரைக்குள் எங்காவது மரம் வெட்டினால் எங்களுக்கு தகவல் வருகிறது. ஆனாலும் எங்களால் அதை தடுக்க முடியவில்லை. பல இடங்களில் அரசு அதிகாரிகளே மரங்களை வெட்ட துணைபோகிறார்கள். எனவே, புதிதாக மரங்களை நடுவதைக் காட்டிலும் இருக்கின்ற மரங்களை பாதுகாப்பது குறித்து அடுத்த 2 மாதங்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். அதன் பிறகு, புதிய கன்றுகளை நடுவோம். மாமதுரையை மரங்கள் நிறைந்த மதுரையாக மாற்றுவோம்.’’

SCROLL FOR NEXT