வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ள உதகை மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சர்வதேச சுற்றுலா இடமான நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர, கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக் கலைத் துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். இதில் முக்கியமாக ரோஜா காட்சி, மலர் கண்காட்சி, பழக்காட்சி ஆகியவை அடங்கும்.
உதகை மலர் கண்காட்சி உலக பிரசித்திப் பெற்றது என்பதால் மலர் கண்காட்சியைக் காண உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு 120-வது மலர் கண்காட்சி வரும் 27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கவுள்ளது.
புதிய அரசு பதவியேற்று நடக்கும் முதல் விழா என்பதால் இவ்விழாவை பிரம்மாண்டமாக நடத்த தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், பூங்கா முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டு னியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம் போன்ற 194 ரக மலர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
மலர்த் தொட்டிகளில் மலர் கள் பூத்து குலுங்குவதால், அவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மாடத்தில் அடுக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பூங்காவில் உள்ள புதுப் பூங்கா பகுதியில் 6 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.