மதுரை: பயணிகளின் சேவையை மேம்படுத்த ரயில்வே துறைக்கு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்பநாபன் அனந்த் கூறினார். மேலும், மதுரை- தேனி வழித்தடத்தில் ரயிலை இயக்குவது சவாலாக உள்ளது என்றும் அவர் விவரித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''இந்திய ரயில்வேயில் ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கும் திறனை கண்காணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்தில் விபத்தின்றி அதிக ரயில்களை இயக்குவது, துல்லியமாக ரயில் பாதையை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட்பம், அதிக எடையைத் தாங்கும் சரக்கு ரயில் பெட்டிகளுக்கு நெகிழ்வு அடுக்கு, ரயில் மின் பாதைகளை கண்காணிப்பது, எடை குறைவான ரயில் சரக்கு பெட்டிகள் தயாரிப்பது, ரயில் பாதை சரளைக் கற்களை சுத்தப்படுத்தும் இயந்திரம், ஊழியர்களுக்கான முன் பயிற்சி மற்றும் தன்னிலை அலுவல்கால பயிற்சி, ரயில் பாலங்களை ஆய்வு செய்ய தற்கால புதிய தொழில் நுட்பம், பயணிகள் சேவையை மேம்படுத்த மின்னணு தரவுகளை பகுப்பாயும் தொழில் நுட்பம் போன்ற ரயில்வே துறைக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வாய்ப்பு தரப்பட உள்ளது.
இது போன்ற 100 தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதற்கான விரிவான தகவல்களை ''http://www.innovation.indianrailways.gov.in'' என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மதுரை - தேனி பகுதியில் போடிநாயக்கனூர் வரை ரயில் பாதை பணிகள் முடிவடைந்த பிறகு புதிய ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும். பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. பயணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரயில் இடை நிறுத்தங்கள் வழங்குவது கூடாது என்பது ஒரு கொள்கை முடிவாக உள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் நடை மேடை களை உயர்த்துவது, நீட்டிப்பது மேற்கூரை அமைப்பது, மின்சார சேமிப்பிற்கான எல்இடி விளக்குகள் அமைப்பது போன்ற பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
கோவை மற்றும் மேட்டுப் பாளையம் ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமான ரயில்களை கையாளப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கு போதிய இடவசதியும் இல்லை. இதனால் மதுரை - கோவை பிரிவில் தென்மாவட்டம் உட்பட கூடுதல் ரயில்கள் இயக்குவது சாத்தியமின்றி இருக்கிறது.ரூ.358.63 கோடி மதிப்பில் நடக்கும் மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த மே 25ம்தேதி வெளியானது.
ஒப்பந்ததாரர்களுடன் இன்று (ஜூன் 17) சென்னையில் நேர்காணல் நடக்கிறது. ஜூலை 25ல் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, அதன்பின், மறு சீரமைப்பு பணி தொடங்கும். மதுரை கீழ்மதுரை, ராஜகம்பீரம் போன்ற ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிறுத்துவது பற்றிய கோரிக்கை பரிசீலினை யில் உள்ளது. மதுரை- திருமங்கலம் இருவழிப் பாதை பணி துரிதப்படுத்தப்படும். கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க, மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை'' என்று அவர் கூறினார்.
மதுரை- தேனிக்கு ரயிலை இயக்குவது சவால்: மேலும், அவர் கூறுகையில், ''மதுரை - தேனி புதிய ரயில் பாதையில் காலை, மாலை என இரு நேரத்தில் மட்டுமே ரயில் இயக்கப்படுகின்றது. வருவாயை பார்க்காமல் சேவை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இப்பாதையை பொதுமக்கள் உபயோகிக்க தடை இருந்தும், ஆபத்தை உணராமல் ரயில் பாதையை பயன்படுத்துகின்றனர். கூட்டமாக தண்டவாளத்தை கடக்கின்றனர். ரயில் வரும்போது, செல்ஃபி எடுக்கின்றனர். ரயில் ஓட்டுநர் மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டியுள்ளது.
இவ்வழித்தடத்தில் ஒவ்வொரு நாளும் ரயிலை இயக்குவது பெரும் சவாலாகவே உள்ளது. ரயில் தண்டவாளங்களை பயன்படுத்துவதில் மக்கள் விழிப்புணர்வு தேவை. ஒத்துழைக்க வேண்டும். செக்கானூரணி, உசிலம்பட்டி பகுதியில் சில இடங்களில் ரயில் சுரங்கப்பாதை அமைப்பது, பராமரிப்பது சம்பந்தமாக ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறோம்.
முதுநிலை கோட்ட பொறியாளர் நாராயணன், முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், உதவி வர்த்தக மேலாளர் பிரமோத்குமார் உடனிருந்தனர்.