ராமநாதபுரம்: அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்க வலி யுறுத்தி, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வரும் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என சிலர் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமையே வா, கழகத்தை தலைமை ஏற்று வழி நடத்த வாருங்கள் என ஓபிஎஸ் படத்துடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் பழைய பேருந்து நிலையம், மேம்பாலப் பகுதி போன்ற இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியிருந்த சுவரொட்டிகளை, பழனிசாமியின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர்.
அப்பகுதியில் இபிஎஸ் ஆதர வாளர்கள், ‘ஒற்றைத் தலைமை ஏற்கும் எடப்பாடியாரே’ என பரமக்குடி நகர் நிர்வாகிகள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பரமக்குடி பகுதியிலும் பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
இதனால் தென்மாவட்டத்திலும் அதிமுக ஒற்றை தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.