புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்திலிருந்து வெளியான குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய்க்கு சத்துணவுத் திட்டத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
நார்த்தாமலை ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தமங்கலப் பட்டியைச் சேர்ந்த கலைச் செல்வன், பழனியம்மாள் தம்பதியரின் மகன் புகழேந்தி(11). கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி நார்த்தாமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்தார்.
அப்போது, பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது, அங்கிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து புகழேந்தி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என கந்தர்வகோட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பயிற்சித் தளத்தை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு சார்பிலும், அமைச்சர்கள் சார்பிலும் ரூ.15 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், புகழேந்தியின் தாயாருக்கு சத்துணவுத் திட்டத்தில் சமையல் உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
இதையடுத்து, தனக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆட்சியர் கவிதா ராமுவை, எம்எல்ஏ சின்னதுரைவுடன் பழனியம்மாள் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சு.மதியகழன், நார்த்தாமலை ஊராட்சி மன்றத் தலைவர் வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.