தமிழகம்

தாம்பரம் ரயிலை நிரந்தரமாக்க தென்காசி மக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

தென்காசி: திருநெல்வேலில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இந்த மாதத்துடன் நிறுத்தப்படும். இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலில் இருந்து அம்பா சமுத்திரம், பாவூர்சத்திரம், தென் காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் தமிழ் புத்தாண்டு முதல் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் நலன் கருதி இந்த சிறப்பு ரயில் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

இதேபோல், வியாழக்கிழமைதோறும் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக மேட்டுப் பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயங்கி வருகிறது.

இந்த சிறப்பு ரயில்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மாதம் (ஜூன்) வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இந்த ரயில்களை நிரந்தரமாக இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, “திருநெல்வேலி- தாம்பரம் மற்றும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சிறப்பு ரயில்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அம்பா சமுத்திரம் பாவூர்சத்திரம் ரயில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் சென்னை செல்வதற்கு தாம்பரம் சிறப்பு ரயில் மிகவும் வசதியாக உள்ளது.

இந்த இரு சிறப்பு ரயில்கள் மூலமாக இந்த மூன்று மாதங் களில் ரூ. 2.5 கோடிக்கு மேல் தென்னக ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது. எனவே வரு மானம் கொழிக்கும் இந்த வழித்தடத்தில் தாம்பரம் மற்றும் மேட்டுப் பாளையத்துக்கு நிரந்தர மாக ரயில் இயக்க வேண்டும்.

திருநெல்வேலியில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் இரண்டு ரயில்களை பயன்படுத்தி இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படு வதால் தென்னக ரயில்வேக்கு இந்த சிறப்பு ரயில்களை நீட்டிப்பது எளிது என்றனர்.

SCROLL FOR NEXT