சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் 781 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 684 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். சென்னையில் 39,537 தெருக்கள் உள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி 543 தெருக்களில் தொற்று பாதிப்பு உள்ளது. 16 வீடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 5-க்கும் மேற்பட்ட கரோனோ பாதிப்புகள் 6 தெருக்களிலும், 4-க்கும் மேல் தொற்று 15 தெருக்களிலும், 3-க்கும் மேல் தொற்று 46 தெருக்களிலும், 3-க்கும் கீழ் தொற்றுள்ள 497 தெருக்களிலும் அடையாம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மூன்று மண்டலங்களில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 99.72% முதல் தவணைத் தடுப்பூசியும், 85.51% இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 87.30% முதல் தவணை தடுப்பூசியும், 66.64% இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
12 முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 43.84 % முதல் தவணைத் தடுப்பூசியும், 20.9% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 1.74 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.