உடுமலை: உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
உடுமலையில் இருந்து மூணாறுசெல்லும் சாலையில் ஒன்பதாறு சோதனைச் சாவடி உள்ளது. அங்கிருந்து சாலையின் இருபுறமும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. சாலையின் ஒருபகுதியில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளதால், அவ்வப்போது குடிநீர் தேவைக்காக வன விலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகளவிலான யானைகள் சாலையை கடந்து செல்வதும்,மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புவதுமாக உள்ளன. இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித் துள்ளனர்.
இதுகுறித்து உடுமலை வனச்சரகர் சிவக்குமார் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களாக உடுமலை- மூணாறு பிரதான சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தை இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினரின் அறிவுறுத்தலை மீறி, வாகனங்களை நிறுத்தி யானை கூட்டத்தை ரசிப்பதாகவும், புகைப்படம் எடுப்பதாகவும் தகவல் வந்துள்ளது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்,’’ என்றார்.