சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனநாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலை மாயமான விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, இதுவரை 29 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தபோது புன்னைவனநாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 2018-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைவாக முடிக்கக் கோரியும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில், ‘மயில் சிலை மாயமான விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, இதுவரை 29 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இன்னும் 9 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாயமான மயிலின் அலகில் மலர்தான் இருந்தது என ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றம் அனுமதித்தால் தற்போது உள்ள மயில் சிலையை அகற்றிவிட்டு, அலகில் மலருடன் கூடிய மயில் சிலை அந்த இடத்தில் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்ப்டடது.
அதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 28-க்கு தள்ளி வைத்துள்ளனர்.