தமிழகம்

தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து சாதித்த ஏழை மாணவர்: அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊக்கத்தால் 489 மதிப்பெண்கள்

அ.வேலுச்சாமி

மருங்காபுரி அருகே தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த அரசுப் பள்ளி மாணவர் பாண்டிச்செல்வம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில், மருங்காபுரி ஒன்றியம் கல்லக்கம்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் பாண்டிச்செல்வம் தமிழில் 97, ஆங்கிலத்தில் 92, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 என மொத்தம் 489 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இவரை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினர்.

அப்போது, வறுமையால் ஏற்பட்ட பாதிப்புகளும், ஆசிரியர்களின் ஊக்கமுமே தன்னை இந்தளவுக்கு மதிப்பெண் பெற வைத்ததாக பாண்டிச்செல்வம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

என் தந்தை சுப்பிரமணி, தாய் தமிழ்ச்செல்வி. வயதான இருவருமே விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். தற்போது மழையின்றி காடுகள் காய்ந்து கிடப்பதால், அந்த வேலைக்கும் வழியில்லை. எனவே, மாதம் ரூ.2,500 சம்பளத்தில் பேருந்து கிளீனராக என் தந்தை வேலை செய்கிறார். இதுதான் எங்கள் குடும்பத்துக்கான மொத்த வருமானம்.

சொந்தமாக நிலம் இல்லாததால், சாலையோரம் உள்ள மற்றொருவரின் இடத்தில் சிறியதாக கூரை போட்டு குடியிருந்து வருகிறோம். ரேஷனில் கிடைக்கும் இலவச அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டுவோம். சில சமயங்களில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படும். வசதியில்லை என்பதால் பெரும்பாலான உறவினர்கள் எங்களுடன் பேசமாட்டார்கள். இதை நினைத்து பல நாட்கள் அழுதுள்ளேன்.

இந்த நிலை மாற வேண்டுமெனில், நான் படித்து பெரிய ஆளாக வேண்டும் என முடிவெடுத்தேன். இதை எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் கூறி உதவி செய்யுமாறு கேட்டேன். நோட்டுகள், கையேடுகள், ஆடைகள் வாங்கிக் கொடுத்து அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். பேருந்து கட்டணம், மதிய உணவு கொடுத்து வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு அனுப்பி வைத்தனர். அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

எங்கள் குடிசையில் மின்சார வசதி இல்லை. எனவே காண்டா (மண்ணெண்ணெய்) விளக்கின் உதவியுடன் இரவில் படித்தேன். இதனால் ஒவ்வொரு மாதமும் வீட்டில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, விளக்கில் படிப்பதை நிறுத்திவிட்டு வீதிக்குச் சென்று தினமும் இரவு 7 மணி முதல் 12 மணி வரை தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தேன். பொதுத்தேர்வில் 495 மதிப்பெண் எடுப்பேன் என நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் 489 மட்டுமே கிடைத்தது ஏமாற்றம் அளிக்கிறது.

டாக்டர் அல்லது பொறியாளர் ஆவதற்குப் படிக்க அதிக பணம் செலவாகும். என்னால் அது முடியாது. எனவே, நன்றாகப் படித்து ஆசிரியராக விரும்புகிறேன். அந்த பணியில் சேர்ந்தபின், மீண்டும் படித்து பெரிய ஆளாக வர வேண்டும். அதன்பின் என்னைப் போல கஷ்டப்படுவோரை கண்டறிந்து, அவர்களின் படிப்புக்கு உதவ வேண்டும் என்பது என் ஆசை. இப்போது என் குடும்பத்தில் வறுமை நிலவுவதால், ஏதாவது ஒரு நல்ல பள்ளியில், விடுதியில் தங்கிப் பயில எனக்கு உதவி செய்தால் நன்றியுடன் இருப்பேன் என்றார்.

SCROLL FOR NEXT