தமிழகம்

திருச்சி மாவட்டத்தில் உரிய ஆய்வு செய்யப்படாமல் இயக்கப்படும் பள்ளிப் பேருந்துகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகளின் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிப் பேருந்துகள் உரிய ஆய்வு செய்யப்படாமல் இயக்கப்படுவதால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களின் பாதுகாப்புஅம்சங்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி சான்றிதழ் வழங்குவது வழக்கம். ஆய்வின்போது, பள்ளி வாகனங்களின் இயங்குதிறன், அவசர கால கதவுகள், தீயணைப்பான், முதலுதவிப் பெட்டி, இருக்கைகள், தரைத்தளம் உள்ளிட்டவற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காத வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்படும்.

அதன்படி, நிகழ் கல்வியாண்டில் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே தமிழகம் முழுவதும்பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திருச்சி மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட பள்ளிப் பேருந்துகள் உள்ள நிலையில், இதுவரைஅவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்யவில்லை. இதனால் பள்ளி செல்லும்குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் பள்ளிதலைமையாசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்வதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை’’ என்றார்.

இதுகுறித்து பெரிய கம்மாளத்தெருவைச் சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை பொன்ராஜ் கூறும்போது, ‘‘தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிச்சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் இதுவரை பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படாமல் இருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகிறது. எனவே, பள்ளி வாகனங்களை உடனடியாக ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த 10-ம் தேதி போக்குவரத்து ஆணையர் ஆய்வுக்காக வந்திருந்ததால் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்ய முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் ஆய்வாளர் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்து விரைவில் பள்ளிப்பேருந்துகள் ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT