தமிழகம்

ரூ.2 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விவசாயக் கடன்கள் தள்ளுபடியாகும் வாய்ப்பு: எஞ்சியவை தள்ளுபடி வரம்புக்குள் வராது என வங்கிகள் தகவல்

குள.சண்முகசுந்தரம்

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாயக் கடன்கள் ரூ.5,780 கோடி அளவுக்கு ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ரூ.2 ஆயிரம் கோடிக்கான கடன்கள் மட்டுமே தள்ளுபடியாகும் எஞ்சிய தொகைக்கான கடன்கள் தள்ளுபடி வரம்புக்குள் வராது என கூட்டுறவு வங்கி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாயக் கடன் களை ரத்து செய்யும் கோப்பில் முதல் நாள் முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதனால் அரசுக்கு 5,780 கோடி ரூபாய் நிதிப்பொறுப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், “கடன் தள்ளுபடி என்பது தமிழக அரசின் கண்துடைப்பு நாடகம். பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக் கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பால், ரூ. 2 ஆயிரம் கோடிக்கான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்ய வாய்ப்பிருப்பதாக கூட்டுறவு வங்கி கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக வங்கிகள் தரப்பிலிருந்து பேசியவர்கள், ’’2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் குறு விவசாயி கள், 2 ஏக்கருக்கு மேல் 5 ஏக்கருக்குள் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள். தமிழக அரசு இப்போது அறிவித்திருக்கும் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடி கணக்கு என்பது பெரு விவசாயி களின் கடனையும் சேர்த்துத்தான்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒட்டு மொத்தமாக கூட்டுறவு வங்கிகளில் நிலு வையில் உள்ள விவசாயக் கடன்களை கணக்கு எடுத்து மொத்தத் தொகையையும் கடன் தள்ளுபடி கணக்கில் சேர்த்து ரூ.5,780 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இதில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனைவிட பெரு விவசாயிகளின் கடன் தொகை சராசரிதான் அதிகமாக உள்ளது.

உதாரணத்துக்கு ராமநாதபுரம் மாவட்டத் தில் ரூ.160 கோடிக்கும் சிவகங்கை மாவட் டத்தில் சுமார் ரூ.102 கோடிக்கும் விவ சாயக் கடன்கள் நிலுவையில் இருப்பதாகக் கணக்கு கொடுத் திருக்கிறார்கள். ஆனால், இவ்விரண்டு மாவட்டங்களிலும் சிறு, குறு விவசாயிகளின் கடன் என்பது முறையே சுமார் ரூ.75 மற்றும் ரூ.62 கோடிகள்தான். இப்படி மாநிலம் முழுவதும் கணக்கு எடுத்தால் சிறு, குறு விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் நிலுவைத் தொகை சுமார் ரூ. 2 ஆயிரம் கோடிக்குள்தான் இருக்கும். எஞ்சிய தொகைக்கான கடன்கள் தள்ளுபடி வரம்புக்குள் வராது.

இந்த உண்மை தெரியாமல் கூட்டுறவு விவசாயக் கடன்கள் அனைத்தும் ரத்தாகி விடும் என்ற நினைப்பில் விவசாயிகள் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கும் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தெளி வான புரிதல் இல்லாததால் அவர் களும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்யக் கோராமல் பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்கள்.

SCROLL FOR NEXT