தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அதிக தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.
தமிழக தலைநகர் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர் உள்ளிட்ட 10 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை 31 லட்சத்து 93 ஆயிரத்து 802 பேர். அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட177 வேட்பாளர்கள் இந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் மாவட்ட அளவில் 22 லட்சத்து 74 ஆயிரத்து 082 வாக்காளர்கள் (71.20 சதவீதம்) வாக்களித்தனர்.
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டுவில் உள்ள ராம் கல்வி குழும வளாகத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. கும்மிடிப்பூண்டி தொகுதியின் 302 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பொன்னேரி தொகுதியின் 291 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாகவும், திருத்தணி தொகுதியின் 304 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், திருவள்ளூர் தொகுதியின் 287 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன.
காலை முதல், இரவு வரை நீடித்த இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ஆளுங்கட்சியான அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி (தனி), பூந்தமல்லி (தனி), மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. திருவள்ளூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்றியது.