சென்னை: விசாரணைக் கைதி மரணங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர் என்ற விசாரணைக் கைதி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள் வருமாறு:
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: சென்னைகொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல் நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியைத் தருகிறது. இந்த ஆட்சியில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையும் இல்லை.
திமுக ஆட்சியில் லாக்கப் மரணங்களைத் தடுக்கவோ, காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இந்த சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் லாக்கப் மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: காவல் நிலையத்துக்குச் சென்றால், உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது காவல் துறை.கடந்த ஓராண்டில் 7 லாக்கப்மரணங்கள். காவல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?
அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன்: சட்டம்- ஒழுங்கு குறித்து முதல்வர் அவ்வப்போது ஆய்வு நடத்துவதாக வரும் செய்திகள், வெற்று விளம்பரத்திற்காகத்தானோ என்று நினைக்க வைக்கிறது தொடர் லாக்கப் மரணங்கள்.
இதுபோன்ற சம்பவங்கள்நடக்கும்போதெல்லாம், ‘‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்’’ என்று முதல்வர் சொன்னதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்றுமக்களை நினைக்க வைத்திருக்கிறது சமீபத்திய லாக்கப் மரணம்.
கொடுங்கையூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு, லாக்கப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.