தமிழகம்

குழந்தைகள், மாணவர்களுக்கு கதைகள், பஜனைகளை கற்றுத்தர ஆன்லைன் வகுப்பு: இஸ்கான் சென்னை கோயில் ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: குழந்தைகள், மாணவர்களுக்கு கதைகள், பஜனைகளை கற்றுத்தர ஆன்லைன் வகுப்புகளை நடத்த இஸ்கான் சென்னை கோயில் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக, இஸ்கான் சென்னை கோயிலின் தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பக்த பிரஹலாத் சிக் ஷா சமாஜ் மற்றும் கிருஷ்ணா கிளப் ஆகிய 2 திட்டங்களை இஸ்கான் சென்னை கோயில் வருகிற 19-ம் தேதி முதல் தொடங்குகிறது.

பக்த பிரஹலாத் சிக் ஷா சமாஜ் திட்டத்தின் கீழ் 6 வயது முதல் 12 வயது வரையுள்ளவர்களுக்கு கதைகள், ஸ்லோகங்கள், பஜனைகள், ரைம்கள், கலை மற்றும் கைவினை, விநாடி-வினா மற்றும் செயல்பாடுகள், நெருப்பில்லாத சமையல் மற்றும் மெய்நிகர் திருவிழா கொண்டாட்டங்கள் உள்ளிட்டவை கற்றுத் தரப்படும்.

கிருஷ்ணா கிளப் திட்டத்தின் கீழ் 13 வயது முதல் 17 வயது வரையுள்ளவர்களுக்கு கதைகள், விவாதங்கள் உள்ளிட்டவை கற்றுத் தரப்படும். ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய 5 மொழிகளில் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன. இந்த வகுப்புகளில் சேருபவர்கள் வாரத்துக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். இஸ்கான் சென்னையின் அனுபவம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர், தன்னார்வலர்களால் ‘கூகுள் மீட்’ மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.

இஸ்கான் சென்னை கோயில் உட்பட சென்னையின் சில இடங்களில் நேரடி வகுப்புகளும் நடைபெறும். ஆன்லைன் வகுப்புகள் நடப்பாண்டு ஜூன் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை நடைபெறும். மேலும், விவரங்களை 9444708680, 8939769129 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும், https://bit.ly/bpss2022-23- என்ற லிங்கில் சென்றும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT