திருவாரூர்: குன்னியூர் கிராமத்தில் ஆள் துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய்க்குட்டியை 5 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
திருவாரூர் மாவட்டம் குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தர் வி.மூர்த்தி. செங்கல், மணல், ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனது வியாபாரத்துக்காக குன்னியூரில் ஒரு இடம் வைத்துள்ளார்.
இந்த இடத்துக்கு நேற்று மூர்த்தி சென்றபோது, அதனருகில் உள்ள ஒரு காலிமனையில் தெரு நாய் ஒன்று குரைத்தபடி சுற்றி சுற்றி வந்ததைத் பார்த்தார்.
அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தனது குட்டி தவறி விழுந்துவிட்டதால்தான், தாய் நாய் குரைத்தபடி சுற்றிவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நாய்க் குட்டியை மீட்க தன் நண்பர்களின் உதவியுடன் மூர்த்தி முயற்சித்தார். அது முடியாமல்போகவே, திருவாரூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார்.
பத்திரமாக மீட்பு
உடனடியாக, அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களின் வழிகாட்டுதலுடன் ஆழ்துளைக்கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் மூலம் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, 5 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு நாய்க்குட்டி மீட்கப்பட்டது.
இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து நாயை மீட்க உதவிய மூர்த்திக்கும், தீயணைப்பு வீரர் களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.