கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-வது தளத்தில் இருந்து 2-வது தளத்துக்கு இறங்கும் சாய்வுதள பாதையின் தடுப்புச் சுவரில் பெயர்ந்து கீழே சரிந்துள்ள கைப்பிடி கம்பி. படம்: க.ராதாகிருஷ்ணன் 
தமிழகம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாய்வுதள சுவரின் கைப்பிடி சேதம்: சிரமத்துக்குள்ளாகும் நோயாளிகள்

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாய்வுதள பாதை தடுப்புச் சுவரின் கைப்பிடி, பெயர்ந்து கீழே சரிந்துவிட்டதால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

கரூர் காந்திகிராமம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என தினமும் 3,000-க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் 3-வது தளத்தில் இருந்து 2-வது தளத்துக்கு இறங்கும் சாய்வுதள பாதையின் தடுப்புச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த உருளை வடிவ கைப்பிடி கம்பி, சுவரில் இருந்து பெயர்த்துக் கொண்டு கீழே சரிந்துவிட்டது.

இதனால், நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மருத்துவமனையின் பல்வேறு இடங்களில் தரை மற்றும் சுவர்களில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரா.முத்துச்செல்வன் கூறும்போது, ‘‘சேதமடைந்துள்ள கைப்பிடி மற்றும் டைல்ஸ்களை சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT