தமிழகம்

பெத்தேல் நகர் வாசிகள் 926 பேருக்கு வீடுகள் தயார்; டிசம்பருக்குள் 510 பேருக்கு ஏற்பாடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பெத்தேல் நகரின் 1,436 ஆக்கிரமிப்பாளர்களில் 926 பேருக்கு வீடுகளை ஒதுக்க தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தயாராக உள்ளது. மீதமுள்ள 510 பேருக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் வீடுகள் ஒதுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017-ம் ஆண்டுகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என ஐ.ஹெச்.சேகர் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இணைப்புகள் மீண்டும் வழங்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பு கட்டடங்களைப் பொருத்தவரை, தமிழக அரசால் அவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் வீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஆர்.மணிசங்கர் அறிக்கை ஒன்றை தாக்கல செய்தார். அதில், மொத்தமுள்ள 1436 ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடங்களை ஒதுக்குவதற்காக தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் 29 கோடி ரூபாய் ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

1436 ஆக்கிரமிப்பாளர்களில் 926 பேருக்கு வீடுகளை ஒதுக்க வாரியம் தயாராக உள்ளது. மீதமுள்ள 510 பேருக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் வீடுகள் ஒதுக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அந்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து மனுதாரர் தரப்பில் விளக்கமனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT