கடலூர்: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கோடை விடுமுறை பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் இனிப்பு மற்றும் ரோஸ் வழங்கி வரவேற்றார். இதனால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், 1188 ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் இன்று (ஜூன் 13) திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பள்ளிகளில் வகுப்பறைகள், வளாகங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தியும், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் சத்துணவு கூடங்களை நல்ல முறையில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கனேசன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ரோஸ் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றார்.
விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ், துணை தலைவர் ராணி தண்டபாணி, திமுக நகர செயலாளர் தண்டபாணி, திமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமாரி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.