மதுரை: மதுரை அருகே கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று காலை பள்ளிக்கு திரும்பிய மாணவ, மாணவிகளை, மோட்டு பட்லு பொம்மைகளைக் கொண்டு வித்தியாசமான முறையில் ஆசியர்கள் வரவேற்ற நிகழ்ச்சி, நெகிழ்ச்சியையும், குதூகலத்தையும் ஏற்படுத்தியது.
கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவ, மாணவர்கள் புதிய சீருடைகள், புதிய புத்தக பைககள், காலணிகளுடன் பள்ளிகளுக்கு குதூகலமாக வந்தனர். இன்று பள்ளிக்கு முதல் நாள் என்பதால் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகளை வரவேற்ற விதம் நெகிழ்ச்சியையும், குதூகலத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அந்த பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளை கவரும் வகையில் குழந்தைகளுக்கு ப்ரியமான மோட்டு பட்லு பிரமாண்டமான பொம்மைகள் கொண்டு வரவேற்றனர். குழந்தைகள் அந்த பொம்மைகளை கண்டதும் துள்ளிக் குதித்து குதூகலமடைந்தனர். அந்த பொம்மைகள் அருகே நின்ற அவற்றை கிள்ளிப் பார்த்தும், தொட்டுப்பார்த்தும், கட்டித் தழுவியும், அதனுடன் விளையாடியபடி நடனமாடி மகிழ்ந்தனர். பள்ளி திறந்த முதல் நாளே மாணவ, மாணவிகளை பெரும் மகிழ்ச்சியடைய வைத்த ஆசிரியர்களின் இந்த வரவேற்பு ஏற்பாடு பெற்றோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மோட்டு, பட்லு பொம்மைகள் வரவேற்பு முடிந்ததை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் திவ்யநாதன் தலைமையில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட்டுகள் மற்றும் விவேகானந்தரின் கை அடக்க புத்தகங்களையும் வழங்கி உற்சாகமாக வாழ்த்தி வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற கடவுள் வழிபாட்டில் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பல்வேறு அறிவுரைகள் வழங்கினா். மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைகளுக்கு சென்றனர்.