இலவசங்களை அறிவித்து ஆட் சியில் அமர அதிமுக, திமுக நினைக்கின்றன என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.
திருவாடானை சட்டப் பேரவை தொகுதி பாஜக கூட்டணி கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து திருவாடானை பஸ் நிலையம் அருகே நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
அதிமுக, திமுக தமிழக மக்களை பந்தாடிக் கொண்டி ருக்கிறது. பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம். அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமிழக மக்கள் எப்போதும் ஏழ்மை யிலேயே இருக்க வேண்டும் என விரும்புகின்றன. அதனால் தேர்தலின்போது அதிமுக, திமு கவினர் இலவசங் களை அறிவித்து ஆட்சியில் அமர நினைக்கின்றனர்.
மக்கள் சுய முயற்சியில் முன்னேற வேண்டும் என பாஜக நினைக்கிறது. தமிழகம் கலாச் சாரம், பண்பாடு, இயற்கை வளம் நிறைந்த மாநிலம். இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அதற்கு காரணம் இலவசங்களே. இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட ரூ.11,500 கோடியை ஆக்கப்பூர்வ மாகப் பயன்படுத்தியிருந்தால் 25 ஆயிரம் பள்ளிகளோ, ஆயி ரம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களோ கட்டியிருக்கலாம்.
மின் உற்பத்திக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால் தமிழக மின்வாரியத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளாக மின் உற்பத்தியை கண்டு கொள்ளவில்லை. நிலக் கரியில் ஊழல் செய்ததால் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. மோடி அரசின் 2 ஆண்டுகளில் எந்த ஊழலையாவது சுட்டிக்காட்ட முடியுமா?
ஏழை மக்களின் கண்ணீரை துடைக்க 2018-க்குள் 5 கோடி ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் வெள்ளம் வந்த போது பிரதமர் மோடி மக்களை சந்தித்து ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார். இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்தாலும் சுட்டுக்கொல்லக் கூடாது என இலங்கை அரசுக்கு கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திலும் ராஜ்நாத் சிங் பேசினார்.