தமிழகம்

சேலத்தில் பணம் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு: கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் ஒரே நேரத்தில் பல பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இரு நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுப்பதாக எதிர் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையம் பணம் விநியோகத்தை கண்காணிக்க கூடுதல் பறக்கும் படையை நியமித்து, ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இவற்றை மீறி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதியில் அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் பணம் விநியோகம் செய்த 2 அதிமுக-வினரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல இடைப்பாடி தொகுதியில் அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் பணம் கொடுக்க முயற்சித்ததாக இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சி 59-வது கோட்டத்துக்கு உட்பட்ட ராபர்ட் ராமசாமி நகர் பகுதியில் அதிமுக-வினர் சிலர் பெண்களை அழைத்து அவர்களுக்கு ஓட்டளிக்க பணம் வழங்கி வருவதாக சேலம் மாநகராட்சி தேர்தல் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக புகார் வந்தது.

இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகர் வீட்டுக்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர் வீட்டுக்குள் பூத் சிலிப்புடன் இருந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அப்பெண்கள் மழுப்பலான பதில் அளித்தனர். மேலும் பணம் விநியோகத்துக்கான ஆதாரங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திரும்பினர்.

இதேபோல, சேலம் மாநகரின் பல பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக அரசியல் கட்சியினர் மாற்றி மாற்றி புகார் செய்து வருகின்றனர்.

பணம் விநியோகம் குறித்து வரும் புகார்கள் அளித்தால் அதிகாரிகள் காலதாமதமாக வருவதாகவும், இதனால், உஷார் அடையும் பணம் வழங்குவோர் அங்கிருந்து தப்பிவிடுவதால், பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திரும்புவதாக திமுக-வினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (14-ம் தேதி) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடியும் நிலையில், இன்று இரவு அரசியல் கட்சியினர் முழு வீச்சில் விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்க இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT