சென்னை: ஆற்காடு வீரசாமி இறைவனடி சேர்ந்துவிட்டதாக கூறிய தவறான தகவலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டதாக தெரிவித்தார். இதைக் குறிப்பிட்டு பலர் சமூக வலைதளத்தில் ஆற்காடு வீரசாமி மரணம் அடையவில்லை என்று தகவலைச் சுட்டிக்காட்டி வந்தனர்.
மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆற்காடு வீரசாமி மகன் கலாநிதி வீராசாமி, "தனது கொள்ளுப் பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆற்காடு வீரசாமி இறைவனடி சேர்ந்து விட்டதாக கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்!" என்று தெரிவித்துள்ளார்.