சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய பல துறை செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஆர்.லால்வேனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தில் அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம்வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த 2022-23 நிதியாண்டில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள்சட்டம் 2016-ல் வலியுறுத்தப்பட்டுள்ளபடி இட ஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணி நியமனம் செய்வதை கண்காணிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும்’’ என அறிவித்தார்.இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு,மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
குழு உறுப்பினர்கள்: இக்குழுவில், தொழிலாளர் துறை செயலர், மனித ஆற்றல் மேலாண்மைத் துறை செயலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழு, அனைத்து அரசுத்துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை கண்காணிக்கும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள், விதிப்படி நிரப்பப்படாத பட்சத்தில்அப்பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கு முறையாக முன் கொணரப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கும்.
மாற்றுத் திறனாளிகள் பணியாற்ற உகந்த பதவியிடங்கள் கண்டறியப்படுவதையும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வுசெய்யப்படுவதையும் கண்காணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.