சென்னை: தமிழகம் முழுவதும் 25 கூடுதல் எஸ்பிக்கள், எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதி பெயரில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் கூடுதல் எஸ்பியாக இருந்தஜோஸ் தங்கையா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ளபள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-வது பட்டாலியனில் பணியில் உள்ள வனிதா பதவி உயர்வு பெற்று மதுரை தலைமையக துணைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்பியாக உள்ள குமார் பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து காவல் கிழக்கு பகுதிதுணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார். சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள தேவி பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையரக தெற்குதுணை ஆணையராக பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
தேனி தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த சக்திவேல் பதவி உயர்வு பெற்று சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப் பிரிவு (2) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்தராமமூர்த்தி பதவி உயர்வு பெற்றுசென்னை காவல் ஆணையரகநிர்வாகப் பிரிவு துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த கோபி, சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 25 கூடுதல்எஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உதவி எஸ்பிக்கு பதவி உயர்வு
இதேபோல உதவி எஸ்பியாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த புக்யா சினேக பிரியா கமாண்டன்ட், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல நவீனமயமாக்கல் பிரிவு உதவி எஸ்பியாக இருந்த பண்டி கங்காதர் செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன விஜிலென்ஸ் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய காவல் மாவட்டம்
ஒருங்கிணைந்த சென்னை காவல் ஆணையரகம் ஆவடி, தாம்பரம், சென்னை என 3 ஆக அண்மையில் பிரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள சில பகுதிகள் ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குள் சென்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை காவல்ஆணையரக எல்லைக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற கொளத்தூர் பெயரில் புதிய காவல் மாவட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த ராஜாராம்கொளத்தூர் காவல் மாவட்டதுணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
‘இந்து தமிழ் திசை' செய்தி
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி ‘புதிதாக உருவாகும் கொளத்தூர் காவல் மாவட்டம்' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.