யார் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்து, வாக்களியுங்கள் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.
திமுக சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் மு.பெ.சாமிநாதன், தெற்கு தொகுதி வேட்பாளர் க.செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவாக திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் க.அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க, தமிழக நதிகளை தேசிய நதிகளுடன் இணைக்க வேண்டும்.
சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழையின் நீர், கடலில் வீணாகக் கலந்தது.
இதுபோன்ற நிலையை மாற்ற, திமுகவின் திட்டங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
திமுகவால் மட்டுமே மதுவிலக்கை அமல்படுத்த முடியும். திமுக மதுவிலக்கை அமல்படுத்தும் என்று கூறியதால் மட்டுமே, அதிமுகவும் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது. பால் விலை, மாதந்தோறும் மின்கட்டணம், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, விவசாய பயிர்க்கடன் ரத்து, என ஏராளமான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, நடைமுறைப்படுத்தப்படும். எனவே மக்கள், யார் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.