தமிழகம்

தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் வேகமாக பரவும் உருமாறிய ஒமைக்ரான் : மக்கள் நல்வாழ்வு துறை செயலளர் ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

சென்னை: உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தாவர்களிடம் இருந்து வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்பதால் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கில் தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "கரோனாவின் 3 அலைகளை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா மட்டுமல்லாமல் பிரேசில்,தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தியாவில், கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 100ம், தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 200க்கும் மேல் தொற்று உறுதியாகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் 100க்கும் கீழ் குறைந்து இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து, இன்று 200 க்கும் மேல் பதிவாக உள்ளது.

அதிலும் உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றான பிஏ4, பிஏ5 தமிழகத்தில் பதிவாக துவங்கியுள்ளது. இதவரை தமிழகத்தில் பிஏ4 வகை 7 பேருக்கும், பிஏ5 வகை தொற்று 11 பேருக்கும் உறுதியாகியுள்ளது. இவர்கள் லேசான தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்கள் 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 1.2 கோடி பேர் 2வது தவனை தடுப்பூசி செலுத்தாமலும், 43 லட்சம் பேர் முதல் தவனை தடுப்பூசியை செலுத்தாமலும் உள்ளனர். கரோனா தொற்றினை தடுக்க தடுப்பூசி செயல்பாடு மிக அவசியம் என்றும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் மூலமாக புதிய வகை தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணையை 93.87% பேரும், இரண்டாம் தவனையை 83.6% பேரும் செலுத்தியுள்ளனர். இதுவரை 11.18 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையில் ராணிப்பேட்டை, மதுரை, நாமக்கல், தேனி மாவட்டங்கள் குறைவாக உள்ளது.

மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. கரோனா தொற்று வந்ததும் சிகிச்சை பெறுவதை காட்டிலும் வராமல் தடுப்பது மிக முக்கியம். இதனால் மக்கள் அலட்சியமாக இருந்துவிட கூடாது. இதற்காக தடுப்பூசியை 12ம் தேதி நடைமெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயம் இல்லையென்றாலும், தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கடமை. சமூக பாதுகாப்பிற்காக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 10% பேர் மட்டுமே முக கவசம் அணிகின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 1077 பேர் இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளனர். அதில், 51 பேர் மருத்துவமனையிலும், 11 பேர் ஆக்சிஜன் சிகிச்சையிலும், 7 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் மருத்துவமனைகளில் 1 விழுக்காட்டிற்கும் கீழ் தான் சிகிச்சை பெருபவர்களின் எண்ணிக்கை உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT