தமிழகம்

ஈரோடு: அரசு கொள்முதல் மையம் திறக்க வலியுறுத்தி சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு அருகே நெல் கொள்முதல் மையம் திறக்க வலியுறுத்தி, சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரினைக் கொண்டு, காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்குட்பட்ட 15 ஆயிரத்து 800 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. காலிங்கராயன் கால்வாய் பாசனப் பகுதியில், பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை தற்போது நடந்து வரும் நிலையில், இப்பகுதியில் அரசின் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஈரோடு - கரூர் சாலையில் உள்ள சோளங்காபாளையத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க வலியுறுத்தி, பிரதான நெடுஞ்சாலையில், விவசாயிகள் நெல்லினைக் கொட்டியும், டிராக்டர்களை நிறுத்தியும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மலையம்பாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். நெல் கொள்முதல் மையம் திறப்பது தொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் இன்று மதியம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது: ''காலிங்கராயன் கால்வாய் பாசனத்தில், இப்பகுதியில் 700 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன. அரசு நெல் கொள்முதல் மையம் திறக்காததால், தனியாரிடம் கிலோ ரூ 14-க்கு விவசாயிகள் நெல்லினை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வியாபாரிகள் நெல் கொள்முதலுக்கு ஆர்வம் காட்டததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு உடனடியாக இப்பகுதியில் நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும்'' என்றனர்.

SCROLL FOR NEXT